கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் காணிகளைக் கைப்பற்றுவதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என்றும், கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று உடனடியாக நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசியல் பின்னணியுடன் கிழக்கு மாகாணத்தில் அரங்கேறும் காணி ஆக்கிரமிப்புகளால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை முறியடிக்க விசேட பொலிஸ் குழுவை நியமிக்க உத்தரவிட்டார்.
மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி நிரப்பல்களைப் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார்.
வர்த்தகத் திட்டங்கள்..
"மகாவலி அதிகார சபையால் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வர்த்தகத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டு, இதுவரை அபிவிருத்தி செய்யப்படாமல் முடக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் அரசால் கையகப்படுத்தப்படும். அவை மாவட்ட அல்லது பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டு, முறையான திட்டங்களின் கீழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்." - என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுவது அரசியல் ரீதியான பணியல்ல, அது ஒரு தூய நிர்வாகப் பணியாகும். எனவே, நிர்வாகக் கட்டமைப்புகள் எக்காரணம் கொண்டும் இனங்களின் அடிப்படையில் அமையக் கூடாது.
அவை நிலப்பரப்பின் அளவு, மக்கள் தொகை போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்." - என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையைப் பாதுகாக்க 'கடல் தடுப்புச்சுவர்' அமைப்பது ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒலுவில் துறைமுகம் மற்றும் மீன்பிடித் துறைமுகத்தை உள்ளடக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விஞ்ஞானபூர்வமான அவசர ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.




ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri