ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு! ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம்
பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள், சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இன்று மாலை காணொளி மூலம் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அமைதிப் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்
இந்த இக்கட்டான காலங்களில் பொறுமையுடன் செயற்படுமாறும்,சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அனைத்து பொறுப்புள்ள குடிமக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும்,வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டையும்,மக்களையும் பாதுகாப்பதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் தமது ஆதரவை வழங்குமாறும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.