நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தயார்! கோட்டாபய அதிரடி அறிவிப்பு (VIDEO)
புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது.
இந்த வாரத்திற்குள், நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள, மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையும் நியமிக்க முடிவு செய்துள்ளேன்.
மேலும், 19வது திருத்தம் விரைவில் வலுப்படுத்தப்படும். நாடு வழமைக்கு மாறிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த அமைச்சரவை பதவியேற்ற போது பெருமளவிலான சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்சக்கள் அல்லாத இளம் எம்.பி.க்களைக் கொண்ட புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது. அத்துடன், பிரதமர் பதவி விலகியதுடன், முழு அமைச்சரவையையும் கலைத்துவிட்டு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடமளிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
ஆனால், மே 9 திங்கட்கிழமை காலை, நீங்கள் அனைவரும் அறிந்தபடி, மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிகக் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் கலவரம் வெடித்தது.
நாடு முழுவதும் பொதுமக்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கு காரணமான அசல் சம்பவத்தை நான் பாரபட்சமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முப்படைகள் குவிக்கப்படுவதற்கு முன்னரே, இந்தச் செயற்பாடு நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்றது. சில மணி நேரங்களில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சுமார் ஒன்பது பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.சுமார் 300 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு. எனவே, கலவரக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை திட்டமிட்டு, ஆதரித்த மற்றும் விளம்பரப்படுத்திய அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே இவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். இந்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்கள் இதுவரை நடந்துள்ள உயிர் மற்றும் உடமைச் சேதங்களை அவதானித்து, தொடர்ந்து வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படும் அதேவேளையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு பொது மக்களுக்கு விசேட உரையொன்றை வழங்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று இரவு 9 மணிக்கு தனியார் தொலைக்காட்சியின் ஊடாக நேரலையாக உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
