சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் விரைவில் வெளியாகவுள்ள அறிக்கை
சபாநாயகர் அசோக ரன்வல்ல(Ashoka ranwala) தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கையொன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி தகைமை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் சில நாட்களில் இதுதொடர்பில் சபாநாயகரே விளக்கமளிப்பார். அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவே இதுதொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்துவார்.
சபாநாயகர் அவரின் தகுதி தொடர்பில் அறிவித்ததன் பின்னர், அவரின் தகைமை தொடர்பில் வெளியிடப்படும் தகவல் உண்மை எனில் அதுதொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் அந்த தகவல்கள் போலியெனில் எடுக்கக்கூடிய நடவடிக்கை தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி பட்டம்
இதேவேளை, அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, கலாநிதி பட்டம் இருக்குமானால் அதனை நிரூபித்து காட்டுமாறு சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தார்.
மேலும், குறித்த தகவல்கள் உண்மையாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற இணைய தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னாள் கலாநிதி என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தற்பொழுது இந்த கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |