நாளை நிலவில் மோதவுள்ள விண்வெளி குப்பை! விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் கவலை
விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளின் கண்களிலிருந்து விலகி விண்வெளி குப்பைகள் நாளை நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன.
இவ்வாறு விண்வெளியில் சுற்றித்திரியும் குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதே நேரம், எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் எனவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4 ஆம் திகதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்திருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9’ ராக்கெட்டின் மேல்பகுதியான ‘பூஸ்டர்’ நிலவின் மீது மோத இருப்பதாக நாசா முதலில் தெரிவித்திருந்தது.
பின்னர், நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையத்தால் 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் ‘பூஸ்டர்’ என்றும் நாசா அறிவித்தது.
“நிலவில் மோதும் ராக்கெட் எங்களுடையது கிடையாது” என சீனா மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நாளை (வெள்ளிக்கிழமை) நிலவில் மோதவுள்ளதுடன், அது மணிக்கு 9,300 கி.மீ. வேகத்தில் நிலவின் மீது மோத இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விண்வெளி குப்பையானது விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளின் கண்களில் இருந்து விலகி நிலவின் பின்புறத்தில் மோத உள்ளதாகவும், இதனால் செயற்கைக்கோள் படங்கள் மூலம் பாதிப்பை உறுதிப்படுத்த வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் மணிக்கு 9,300 கி.மீ. வேகத்தில் 3 டன் எடை கொண்ட குப்பை மோதுவதால் நிலவில் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் நிலவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு தூசி பரவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.