கடும் அச்சத்தில் தென்னிலங்கை அமைச்சர்கள் - தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் தமது வீடுகளும் தாக்கப்படும் என அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறும் இல்லை என்றால் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் வீடுகளும் சுற்றிவளைக்கப்படும் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் விசேட குழு கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட விமல் அணியினர் கலந்து கொள்ளவில்லை.
இந்த கலந்துரையாடலின் போது சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கிய போது அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமது அச்சத்தை தெரிவித்துள்ளனர். எனினும் மக்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறினால் என்ன நடக்கும் என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனவும் டொலர் பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.