தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை! எழுந்துள்ள குற்றச்சாட்டு
கடந்த 26 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு தென்கிழக்கு (Southeast) பல்கலைக்கழகம் சார்பிலான ஆதரவு கிடைக்கவில்லை என தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன் (Thagedheen) கவலை வெளியிட்டுள்ளார்.
பல்கலைகழக முன்றலில், இன்று (2024.05.27) இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட மற்ற சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புக்களும் பத்திரிகை மாநாடுகளைகளை கூட்டி குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
ஆனால், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் இதுவரை பத்திரிகையாளர் சந்திப்புக்களையோ அல்லது ஆதரவான கருத்துக்களையோ வெளியிடாதது கவலையளிக்கின்றது.
மேலும், 26 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பிதுத்துள்ள நிலையில் இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் வழங்க முன்வரவில்லை.
எனவே, இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் மாணவர்களது எதிர்காலமே பாதிக்கப்படும். இது தொடர்பில் அரசாங்கமோ அல்லது மாணவர்களோ பெற்றோர்களோ தங்களது கருத்துக்களை முன்வைக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
மேலும், நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில், நாங்கள் போராடிவரும் இவ்வாறான சூழலில் சில பல்கலைக்கழகங்களில் உள்ள மனிதாபிமானமற்ற சிலர் எங்களது நியாயமான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் சூசகமாக சில வேலைத்திட்டங்களை செய்ய முனைகின்றனர்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைகள்
அதேவேளை, இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் (M.M. Muhammadhu Khamil), "பல்கலைக்கழக கட்டமைப்பில் பணியாற்றுபவர்கள் என்ற ரீதியில் கல்விசாரா ஊழியர்களாகிய நாங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்காக குரல் கொடுத்துள்ளோம்.
இவ்வாறான நிலையில் சிலர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் கூட்டாக கண்டிக்கின்றோம்.
இவர்கள் எங்களது கஷ்டங்களை உணர்ந்து எங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், போராட்டத்தின் போது "வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% (MCA) கொடுப்பனவை வழங்கு” போன்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |