தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவியும், அந்நாட்டின் முன்னாள் முதல் பெண்மணியுமான கிம் கீன் ஹீக்கு ஊழல் மற்றும் இலஞ்ச வழக்குகளில் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயங்கள் மற்றும் அரசு வேலைகளைப் பெற்றுத் தருவதற்காக, கட்டுமான நிறுவன அதிபரிடம் இருந்து 100 மில்லியன் வோன் ($64,750) மதிப்பிலான ஆடம்பர நகைகள், கிறிஸ்டியன் டியோர் (Dior) கைப்பை மற்றும் தங்க ஆமை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை இலஞ்சமாகப் பெற்றதாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இலஞ்சமாகப் பெற்ற பொருட்கள்
இந்த தீர்ப்பின்படி, அவருக்கு 64.8 மில்லியன் வோன் ($42,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இலஞ்சமாகப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பங்குகளை முறைகேடு செய்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் கிம் கீன் ஹீக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஊழல் வழக்கில் இந்த தண்டனை கிடைத்துள்ளது.
இதற்கிடையில், வடகொரியாவிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பிய குற்றத்திற்காகவும், நாட்டில் இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியதற்காகவும் அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.