இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்: யூன் சுக் இயோல் உறுதி
இலங்கையின் முன்னேற்றத்துக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது அமர்வுக்கு இணையாக கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி நியூயோர்க் நகரில் நடைபெற்ற இருநாட்டு தலைவருக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பை பாராட்டும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொழில்வாய்ப்புகள் அதிகரிப்பு
நீண்டகாலமாக இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அந்த சந்திப்பு வழி செய்திருந்தாக சுட்டிக்காட்டியுள்ள தென்கொரிய ஜனாதிபதி, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமர்வு நிறைவடைந்து நாடு திரும்பியவுடன் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை முன்னெடுக்கத் தேவையான பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும், தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கைக்கு தென்கொரியா வழங்கியிருக்கும் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கவும் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும், தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பின் ஊடாக இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.