தென் கொரியா: வாக்குச்சீட்டு பற்றாக்குறை விவகாரம் - தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகல்
தென் கொரியாவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது சில மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வாக்குச்சீட்டு பற்றாக்குறைக்கு பொறுப்பேற்று, அந்நாட்டு தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரோ டே-அக் வெள்ளிக்கிழமை பதவி விலகல் செய்துள்ளார்.
பொதுமக்களின் ஜனநாயகக் கடமைக்கும், தேர்தல் செயல்முறையின் மீதான நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திய இந்தத் தவறுக்கு எவ்வித சாக்குகளும் கூற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குளறுபடி குறித்து விசாரிக்க வெளி நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச்சீட்டுகள்
நாடு முழுவதும் உள்ள சுமார் 14,300 வாக்குச்சாவடிகளில், 50 மையங்களில் வாக்குச்சீட்டுகள் தீர்ந்துபோனதாகவும், 22 மையங்களில் விநியோகத் தாமதத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற முன்கூட்டிய வாக்குப்பதிவில் அதிக மக்கள் பங்கேற்றதால், புதன்கிழமை தேர்தலுக்காக தகுதியுள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினருக்கு மட்டுமே வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டதே இந்த பற்றாக்குறைக்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குச்சீட்டு பற்றாக்குறையால் கோபமடைந்த வாக்காளர்கள் சியோலின் சோங்பா மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லவிடாமல் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை காலை நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் மீட்கப்பட்ட பிறகே, அன்று மதியம் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
இந்தத் தேர்தல் குளறுபடி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக் கோரியும், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.