பாரிய வரி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
தெற்காசியாவின் மிகப் பெரிய வட் வரி மோசடி வழக்கில் 20 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட மூன்று வர்த்தகர்களின் தண்டனைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதியரசர்களின் உடன்பாட்டின் மூலம் நேற்று(13.12.2023) குறித்த வர்த்தகர்களின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்ட பிரதிவாதிகளான மொஹமட் சுபைர் அவாமி, மொஹமட் மௌஜுல் அமீர் மற்றும் மொஹமட் காமில் குத்ப்தீன் ஆகியோர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து மூவரடங்கிய மேன்முறையீட்டு குழாமின் பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மேல் நீதிமன்ற தீர்ப்பு
மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருமான நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தனது தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதிகள் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மூவரடங்கிய நீதியரசர் குழுவின் ஏனைய நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் தமது தீர்ப்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் தலையிடும் வகையில் நியாயமான விடயங்கள் வெளிப்படுத்தப்படாததால், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதன்படி, மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டுடன், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனைகளை உறுதி செய்யப்பட்டது.
மேலும், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு இடையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறவிடப்பட வேண்டிய 3.9 பில்லியன் ரூபா வட் வரியை மோசடி செய்த குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த மூன்று பிரதிவாதிகளுக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், மேல் நீதிமன்ற விசாரணையின் போது, பிரதிவாதிகள் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த நிலையில், அவர்கள் இன்றி விசாரணை நடைபெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |