தெற்காசியாவின் மிக நீண்ட போராட்டம் ஒன்பதாவது ஆண்டில்..
இறுதிக்கட்டப் போரில், இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போன தமது உறவினர்களின் தலைவிதியை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நீதியின்றி ஒன்பதாவது ஆண்டை எட்டியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்துடன் தமிழ்த் தாய்மார்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்ட இயக்கம் அண்மைக்கால வரலாற்றில் தெற்காசியாவிலேயே மிக நீண்ட போராட்டமாக கருதப்படுகிறது.
கிளிநொச்சியில் நடைபெற்ற நடைபவனி
மே 2009இல் உள்நாட்டுப் போர் இரத்தக்களரியுடன் முடிவடைந்ததிலிருந்து, தமது கணவர், மகள்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களை தமிழர் தாயகப் பிரதேச மக்கள் தேடி வருவதோடு, பெப்ரவரி 20, 2017 முதல் 2,922 நாட்களாக தொடர்ந்து போராடும் பெற்றோர்களில் குறைந்தது 350 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
போராட்டம் எட்டு வருடங்களை பூர்த்தி செய்து ஒன்பதாவது வருடத்தை எட்டியுள்ள நிலையில், உள்ளூரில் கிடைக்காத நீதியை நிலைநாட்டுவதற்காக சர்வதேச சக்திகளிடம் தஞ்சமடைந்துள்ள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தமிழ் தாய்மார்கள் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் நடைபெற்ற நடைபவனியில் ஒன்றிணைந்தனர்.
தமிழ்த் தாய்மார்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்த அதே வருடத்தில் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் (OMP) கடந்த 9 வருடங்களாக ஒரு காணாமற் போன ஒருவரின் தலைவிதியை வெளிப்படுத்த முடியவில்லை.
நேற்றைய தினம் (பெப்ரவரி 20) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து தமிழ்த் தாய்மார்கள் தங்களின் தலையிலும் கைகளிலும் தீச்சட்டியை ஏந்தியவாறு கிளிநொச்சி டிப்போ சந்தி வரை சென்றனர்.
“குற்றவாளிகள் நீதியை வழங்குவார்களா?” என சிங்களத்தில் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம்
நீதி மற்றும் உண்மைக்கான தனது போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி போராட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"இலங்கை ஜனாதிபதிகளிடமும் நீதியைக் கேட்டு நின்ற நிலையில் இன்று சர்வதேசத்திடம் நீதியை கோரி நிற்கின்றோம்.
எங்களுக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை. எங்களது உறவுகள் 350ற்கும் மேற்பட்டோர் இறந்தாலும் நாங்கள் இறக்கும் தறுவாயில் இருந்தாலும் உண்மைக்கும் நீதிக்குமான எங்களது போராட்டம் தொடருமென்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுகின்றோம்."
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசால் இழைக்கப்பட்ட குற்றங்கள்
"ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு காலக்கெடுவை கொடுக்கக்கூடாது. எங்களது பிரச்சினைக்கான தீர்வை தர வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
" அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான எந்த சமிக்ஞையையும் வெளியிடவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு குழுவில் (CEDAW) பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய போராடும் தமிழ் தாய்மார்கள் பற்றி எதுவும் கூறவில்லை.
இலங்கை அரசால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தண்டனையின்மையை அனுபவிக்கவும் வரப்பிரசாதங்களைப் பெறவும் அனுமதித்தமைக்காக நாட்டை ஆளும் அரசாங்கங்கள் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |