இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல் (Morne Morkel ) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பதவிக்காலம் செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் சா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே, இந்த நியமனம் வழங்கப்பட்ட போதும், மோர்கெல் தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியுடன், இலங்கைக்கான அண்மைய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை.
உள்நாட்டுத் தொடர்
இதன் காரணமாக, இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹதுலே இலங்கைக்கு பயணித்த இந்திய அணியுடன் இணைந்திருந்தார்.
இருப்பினும், செப்டம்பர் 19ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகும் பங்களாதேஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் மோர்கல் தனது பயிற்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார்.
39 வயதான மோர்கல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் (எல்.எஸ்.ஜி) பணியாற்றினார்.
எனவே, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் இருந்த காலத்தில் மோர்க்கலுடன் வலுவான தொழில்முறை உறவை ஏற்படுத்திய கம்பீர், அவரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பரிந்துரைத்ததாக நம்பப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் கம்பீர் ஒரு வழிகாட்டியாக பணியாற்றியதுடன் அதே நேரத்தில் மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
உலக கிண்ண போட்டிகள்
முன்னதாக, இந்தியாவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் உலக கிண்ணப் போட்டிகளின் போது பாகிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் செயற்பட்டார்.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.
இதேவேளை, கம்பீரின் தற்போதைய பயிற்சியாளர் குழுவில் அபிசேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
அதேநேரம், ராகுல் டிராவிட் தலைமையில் செயற்பட்ட டி திலீப், தொடர்ந்தும் களத்தடுப்பு பயிற்சியாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |