இறுதி ஓவரில் பங்களாதேஷை வீழ்த்திய தென்னாபிரிக்கா: புள்ளிபட்டியலில் முதலிடம்
நியூயோர்க் நசவ் கன்ட்றி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பங்களாதேஷுக்கு எதிராக இடம்பெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் தென் ஆபிரிக்கா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியுடன் 9ஆவது ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை தென் ஆபிரிக்கா தன்வசப்படுத்தியுள்ளது.
நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுபடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி ஆரம்ப முதலே விக்கட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.
113 ஓட்டங்கள்
ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்தது . எனினும் அதன் பின்னர் இணைந்த கிளாசன், மில்லர் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது.
இதன் தொடர்ச்சியாக 20 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்புக்கு தென்னாபிரிக்கா அணி 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
முன்வரிசையில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ அதிகபட்சமாக 14 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
கேஷவ் மஹாராஜ்
அதனைத் தொடர்ந்து தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தௌஹித் ரிதோய் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
கடைசி 2 ஓவர்களில் பங்களாதேஷின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஒட்நீல் பாட்மன் மிகத் திறமையாக பந்துவீசி 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரை கேஷவ் மஹாராஜ் மிகவும் நுட்பத்திறனுடன் வீசி 2 விக்கெட்ளை வீழ்த்தியதுடன் 6 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து அணியின் வெற்றியை பதிவு செய்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |