வெளிநாட்டில் மனைவி - கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன்
கொழும்பில் தாய் ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியில் கை, கால்கள் மற்றும் துடைப்பக் கைப்பிடியால் தனது தாயை அடித்து கொன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் தெமட்டகொட, ஆராமய பிளேஸைச் சேர்ந்த சால்வம்மா என்ற 65 வயது பெண்மணி என தெரியவந்துள்ளது.
தாய் மீது தாக்குதல்
கடந்த 12 ஆம் திகதி, சந்தேக நபர் பணம் கேட்டு தாயை துன்புறுத்தியதாக பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் தெரியவந்துள்ளது.
கையால் அடித்து, உதைத்து, துடைப்பத்தை பயன்படுத்தி, காயங்களை ஏற்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த உயிரிழந்தவரின் சகோதரி, அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
வெளிநாட்டில் மனைவி
சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் 4 நாட்களுக்கு பின்னர் அறிந்ததாகவும், 1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 2 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரது ஒரே மகன் ஈஸ்டர் தாக்குதல் நடந்த நாளில் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்தபோது உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
42 வயதான சந்தேக நபர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அருகில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.