காலிமுகத்திடல் போராட்டகாரர்களில் சிலர் வெளிநாடு செல்ல தடை
பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காலிமுகத்திடல் போராட்டகாரர்களில் சிலருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொலிஸார் விடுத்த கோரிக்கை
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்பதால், அவர்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், ஏரங்க குணதிலக்க, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆகியோருக்கே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளரான ரெட்டா என்ற ரவிந்து சேனாரத்ன, ரத்கரவ்வே ஜனரதன தேரர், நடிகர் ஜகத் மனுவர்ன, ஜோஹான் அப்புஹாமி உட்பட ஒன்பது பேர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.