நல்லாட்சிக்காலத்தில் சில அரசியல்வாதிகள் சதோச ஊடாக போதைவஸ்தினையும் கடத்தியுள்ளனர் : சிவனேசத்துரை சந்திரகாந்தன்
நல்லாட்சிக்காலத்தில் ரிசாத் பதியூதின் போன்றவர்கள் சதோச ஊடாக போதைவஸ்தினையும் கடத்தியதுடன் அரிசியினையும் இறக்குமதி செய்து தரகுப்பணத்தினைப்பெற்றுக்கொண்டனர். ஆனால் அந்த நிலைமை இன்று இல்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இலங்கையில் 332 பிரதேச செயலகப்பிரிவுகளில் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீலானமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானம் புனரமைப்புக்கு தெரிவுசெய்யப்பட்டு அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் 15இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் அவர்களைப்போல் வெள்ளை ஆடை அணிந்துகொண்டு ஜனநாயகம் பேசிவிட்டு பின்பக்கத்தினால் அநீதிகளை செய்பவர்கள் நாங்கள் அல்ல.நாங்கள் போடும் ஆடையும் வெள்ளைதான்,பேசுவதும் வெள்ளைதான்,செயலும் வெள்ளைதான்.
ஒரு காலத்தில் சீலாமுனை இளைஞர்களுடன் இணைந்து நானும்ஆயுதம் தூக்கியவன் என்பதற்காக என்மீது பலவிதமான குற்றங்களை சாட்டி சிறையில் அடைத்தார்கள். ஒழித்துவிடப்பார்த்தார்கள்.
இந்த கூட்டங்களின் பிரதிநிதிகள்தான் இன்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்திவருகின்றனர்.
எமது மாவட்டத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இருவர் அபிவிருத்திக்காக பாடுபடுகின்ற உறுப்பினர்களும், இருவர் எதிர்கட்சி உறுப்பினர்களாகவும் ஒருவர் சகோதர இனத்தினை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அரசாங்கத்துடன் இணைந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயங்குகின்றனர்.
அந்த அடிப்படையில் நீண்ட வரலாற்றினைக்கொண்ட எமது மாவட்டம் பலவிதமான வளங்களைக்கொண்டதாகயிருந்தாலும் பயனடையமுடியாத நிலையில் இருந்தோம்.தற்போது மனித வள மேம்பாடு,இருக்கின்ற இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு, அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பு என பலவிதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நன்மைகளை,பயன்களை அடைகின்ற சமூகமாக நாங்கள் மாற்றமடைந்திருக்கின்றோம். நல்லாட்சியில் கொரனா போன்ற எந்தவிதமான பிரச்சினையும் இருக்கவில்லை.இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் உலகளாவிய ரீதியில் பொருளாதார வீழ்ச்சி,அதற்குள்ளும் இந்த மைதானத்திற்கு 15இலட்சம் ஒதுக்கியது என்பது பெரிய விடயம்.
இதற்குள் பலவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். கிராமப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை நியமித்துள்ளோம்,ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.
நல்லாட்சிக்காலத்தில் ரிசாத் பதியூதின் போன்றவர்கள் சதோச ஊடாக போதைவஸ்தினையும் கடத்தியதுடன் அரிசியினையும் இறக்குமதி செய்து தரகுப்பணத்தினைப்பெற்றுக்கொண்டனர்.
ஆனால் இன்று எந்த விவசாயிடமும் கேட்டாலும் நெல் அதிக விலையில் வாங்கப்படுவதாக கூறுகின்றனர்.இன்று மிகப்பெரும் நன்மையடையும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.இதனைப்பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை.
இந்தியா,பாகிஸ்தான்,சீனா ஆகியவற்றின் பிரச்சினைகளையே நம்மவர்கள் கதைக்கின்றனர்.பெரும் பொருளாதார நெருக்கடியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.இதனை யாரும் மறந்துவிடக்கூடாது.
அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் மக்களை வாழவைக்கின்ற அரசியலை செய்யும் நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கைகளையும் நாங்கள் வைத்திருக்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்தினையும் எமது மக்களை வலுவாக்கம் செய்து வளப்படுத்தி எதிர்கால சந்ததியினர் எங்களின் காலத்தினைப்போல் ஓடாமல்,தாய்மார்கள் வீதிகளில் ஒப்பாரி வைத்து அலைந்து திரியால் ஒரு மகிழ்ச்சியான சூழலில் வாழும் நிலையினை உருவாக்குவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.









ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
