தம்புள்ளையில் சூரியஒளி மின்னுற்பத்திப் புரட்சி
தம்புள்ளையில் அமைக்கப்பட்டள்ள 5 மெகாவொட் 'தியஜனனி' மிதக்கும் சூரிய மின்நிலையம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் 10.5 ஏக்கர் நீர்ப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மின்னுற்பத்தி கட்டமைப்பின் ஊடாக 7,500 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கக் கூடியதாக இருப்பதுடன், ஆண்டொன்றுக்கு 6,440 மெட்ரிக் தொன் நச்சுப் புகை (Co₂) வெளியேற்றம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவொட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 'தியஜனனி' மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் நேற்று (18.09.2026) தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு
இத்திட்டத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 6,440 மெட்ரிக் தொன் கார்பன் டைஒக்சைடு (Co₂) வெளியேற்றத்தை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மின்சார உற்பத்தியில் எரிபொருள் மீதான சார்பைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகளவில் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்தத் திட்டம் மற்றுமொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பைப் பயன்படுத்தி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை மூலம் நிலப்பரப்பைப் பாதுகாத்துக்கொண்டே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு
டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் பெருமளவிலான நிதியை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய திட்டங்கள் பங்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் நிலையான எரிசக்தி கொள்கையின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள 'தியஜனனி' திட்டம், இலங்கையின் மின்சார உற்பத்தித் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்களித்த தியஜனனி (தனியார்) நிறுவனம், எரிசக்தி அமைச்சு, இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்களித்துள்ளனர்.
