கையேந்தாத வெற்றியை பெறும் சமூகமாக நாம் உருவாக வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்
எமது சமூகம் கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்பதோடு அதனை உறுதி செய்ய மக்கள் அணிதிரண்டு வரவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil wickremesinghe) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தவறான தெரிவுகள்
மேலும் உரையாற்றுகையில், “திட்டங்கள் எதுவானாலும் சரி அது வழங்கப்படும் போது சரியானவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுடன் அதற்கு தகுதியற்றவர்களை இனங்கண்டு திட்டத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.
அதேபோன்றுதான் இந்த திட்டத்திலும் அவ்வாறு தவறான தெரிவுகள் இனங்காணப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை எட்ட முடியும்.
இதேநேரம் நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றேன்.
இந்நிலையில், தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
பொது வேட்பாளர்
தமி்ழ் பொது வேட்பாளர் விடயம் என்பது தமி்ழ் தரப்பினருக்கு தோல்வியான ஒன்றுதான். இது எவ்விதத்திலும் தமிழ் மக்களுக்கு நலனை பெற்றுத் தராது. அவ்வாறு தெரிந்தும் ஏன் தமிழ் தரப்புகள் இவ்வாறு பொது வேட்பாளர் வேண்டும் கூறி தமிழ் மக்களை தோல்வியை நோக்கி கொண்டு செல்கின்றார்கள் என்பது வேதனையானதாக இருக்கின்றது.
மக்கள் படும் துயரங்களுக்கு நானும் ஒரு காரணம் என்றுதான் எண்ணுகின்றேன். நானும் இந்த உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்த முக்கியமான ஆரம்ப போராளிகளில் ஒருவர் என்ற ரீதியில் அதற்கான தார்மீக பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளத்தான வேண்டும்.
கடந்த கால தமிழ் அரசியல்வாதிகளானாலும் சரி ஆயுத வன்முறையாளர்களானாலும் சரி இருப்பதை பாதுகாக்கவும் இல்லை கிடைப்பதை சாதகமாக்கிக்கொள்ளவும் இல்லை. இதுவே வரலாறு.
அந்தவகையில் நாம் தொடர்ந்தும் கையேந்துவபர்களாக இருக்க கூடாது வெற்றியை நோக்கி செல்லவேண்டும் அதை நான் முன்னெடுக்க தயாராக இருக்கின்றேன். நீங்களும் என்பின்னே அணிதிரண்டால் அது நிச்சயம் நடந்தேறும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |