சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை..!
ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் மட்டுமன்றி, தனிநபர் சுதந்திரத்திலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக முறையான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டங்கள்
இந்தக் கோரிக்கையானது ஒரு தரப்பிடம் இருந்து மட்டுமன்றி, மதத் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களிடமிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, ஒருவரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கும் இத்தகைய சட்டக் கட்டமைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் சில செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், எனவே அச்சட்டங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான வரைவுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் சில மாதங்களுக்குள் அப்பணிகளை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.