களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதி முழுமையாக நிரம்பி மேலதிக நீர் இன்று(21.10.2026 ) காலை முதல் வான் மேவி பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டமும் கேசல்கமு ஓயாவின் நீர்மட்டமும் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
இதனால் களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் நேற்று(20.10.2026) பெய்த கனமழையின் காரணமாக அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கொத்மலை நீர்த்தேக்கத்தில் கலக்கும் ஆக்ராஓயா ஆறு, லிந்துல பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான மெரயா, தங்கக்கலை தோட்டத்தில் உள்ள ஆக்ராஓயா அருகே பல வீடுகளை மூழ்கடித்ததாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதிய வேளையில் திடீரென வந்த வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கிடையில் அம்பேவெல பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அம்பேவெல தொடருந்து நிலையத்திலும், அருகிலுள்ள நுவரெலியா -அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியிலும் தொடருந்து வீதியும் வெள்ளத்தில் மூழ்கியதால், அந்த வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டதாக அம்பேவெல தொடருந்து நிலைய பொறுப்பாசிரியர் அசேந்திர திசநாயக்க தெரிவித்துள்ளார்.






