தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நாடளாவிய ரீதியில் மாபெரும் தொடர் போராட்டம்..!
இலங்கை டெலிகொம் நிறுவனத்தை லைக்கா மொபைலுக்கும் அதானிக்கும் விற்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக நாளை (23) முதல் நாடளாவிய ரீதியாக மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப செயலாளர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்திற்கு வருமானம் தரும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விற்பனையை உடனடியாக நிறுத்து” என்ற தலைப்பில் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளினால் நேற்று (21) கொழும்பு குரு மதுர மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் தீர்மானத்தை வரவு செலவு திட்டத்தில் இருந்து உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா டெலிகொம் என்பது பொன் முட்டையிடும் கோழி எனவும், ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் வரதட்சணையாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது. எனவே இவ்வாறான பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கொள்ளையடிப்பதற்கு, விற்பதன் மூலம் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு கூட பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு திறைசேரிக்கு பணம் தேவைப்படுவதாகவும் அதற்காக நாட்டின் வருமானம் ஈட்டும் நிறுவனங்களை விற்று திறைசேரியை கொழுத்துவதாகவும் செயலாளர் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும், கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தி ஸ்ரீலங்கா டெலிகொம் பெற்ற நிகர இலாபம் மாத்திரம் ஒன்பது பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.