அமரகீர்த்தி அதுகோரளவை கொலை செய்யத் தூண்டியவர்கள் குறித்து மொட்டு கட்சி கேள்வி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவை படுகொலை செய்யப்படுவதர் தூண்டுதலாக செயல்பட்டவர்கள் சுதந்திரமாக உள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னிலையில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவாசம் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அப்பாவி மக்கள் வீதியில் படுகொலை செய்யப்படும் அளவிற்கு குரோதத்தை விதைத்த நபர்கள் இன்று நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பதவிகளிலும் நாடாளுமன்றம் அமர்ந்திருக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்கால அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நபர்கள் ஆட்சியில் இருக்கின்ற சூழலில் கூட நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பொன்றை வழங்குவதற்கு வலுவடைந்தமை தொடர்பில் தாம் நீதிமன்றை தலை வணங்கி நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடும்போது சாகர காரியவசம் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். தனது கடமையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய இளைஞர்களின் வாழ்க்கை சூன்யமாகியுள்ளது எனவும் இந்த பாரிய குற்றச்செயலை வழி நடத்தியவர்கள், இளைஞர்கள் மத்தியில் குரோதத்தை விதைத்தவர்கள் இன்று சுதந்திரமாக சுற்றித் திரிவது பாரதூரமான பிரச்சனை என அவர் தெரிவித்துள்ளார்.