நாமலின் கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் விமர்சனங்கள்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின ஊர்வலம் மே மாதம் முதலாம் திகதி நடத்தாமல் இருக்க எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் இழிவுபடுத்தல்கள் பேசு பொருளாக்கப்பட்டுள்ளன.
இம்முறை மே தினம் போயா தினத்தில் வருவதால் மே தினப் பேரணிக்கு பதிலாக மத அனுஷ்டானங்ககளை முன்னெடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இது கட்சியின் தற்போதைய பின்னடைவை மறைப்பதற்கான ஒரு தந்திரம் என்றே பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களைத் திரட்டும் திறன் இல்லை
மே தினப் பேரணியை நடத்தாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் பௌர்ணமி தினம் என்பது அல்ல மாறாக ஒரு பேரணிக்காக மக்களைத் திரட்டும் திறன் அக்கட்சியிடம் இல்லாததே காரணமாகும்.
அண்மையில் நடத்தப்பட்ட மகளிர் மாநாடு மற்றும் பௌத்த பிக்குகளின் மாநாடு போன்ற நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதை சமூக ஊடகப் பயனாளர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.

எனவே கூட்டம் சேராத நிலையை மறைக்க இது ஒரு சிறந்த சாக்குப்போக்கு என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேரணியொன்றை நடத்தும் அளவிற்கு மக்கள் பலம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு பௌர்ணமி தினத்தை காரணம் காட்டி அதை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என கட்சித் தலைமைக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்
விசேடமாக பௌர்ணமி தினங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பது மற்றும் ஆட்களை பணத்துக்கு அழைத்து வரும் 'மேன்பவர்' நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பது போன்ற விடயங்களும் இந்த விமர்சனங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பணம், மதுபான போத்தல் மற்றும் சோற்றுப் பார்சல் என்பவற்றை வழங்கி கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வந்ததாகவும் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள ஒரு நாளில் அவ்வாறு மக்களை அழைத்து வர முடியாது என்பதும் பலருடைய கருத்தாக உள்ளது.

அதற்கமைய, பௌர்ணமி தினத்தில் மதுபானசாலைகள் மூடப்பட்டிருப்பதனாலும்இ வழங்குவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் தாள்கள் இல்லாததனாலும் மே தினப் பேரணியை நடத்த முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கும் கடும் கிண்டலான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.