சஜித்தின் உதவியை நாடும் மொட்டு கட்சி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடியுள்ளது.
நாடாளுமன்றில் விவாதங்களை அவசரமாக பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு சஜித் உதவியை மொட்டு கட்சி கோரியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த கோரிக்கையை அதிகாரபூர்வமாக விடுத்துள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் இரண்டு நாடாளுமன்ற விவாதங்களைப் பெற்றுக்கொள்ள தலையீடு செய்யுமாறு சஜித்திடம் கோரப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் இவ்வாறு நாடாளுமன்ற விவாதம் கோருவதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் சாகர காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும், பௌத்த பிக்குகளுக்கு எதிரான சமூக ஊடக பிரசாரங்கள் தொடர்பிலும் மொட்டு கட்சி கரசனையை வெளியிட்டுள்ளது. நீதவான்கள் இடமாற்றம் செய்யப்படும் விவகாரம் தொடர்பிலும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றின் சுயாதீனதன்மையை உறுதி செய்ய வெளிப்படைத்தன்மையுடனான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டுமென சாகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் இந்தப் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை நீா்த்துப் போகச் செய்து விடும் எனவும் கூடிய விரைவில் நாடாளுமன்ற விவாதத்தை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.