உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின் எந்தவொரு தரப்புடனும் கூட்டணி இல்லை! மொட்டுக்கட்சி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று மொட்டுக் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த அறிவிப்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, முன்னைய காலங்களில் மொட்டுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட பல்வேறு அரசியல்வாதிகள் அண்மைக்காலமாக எமது கட்சியில் இருந்து விலகி வேறு தரப்புகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
கூட்டணி இல்லை
அவர்களில் சிலர் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக போட்டியிடுகின்றனர்.
அவ்வாறானவர்கள் தேர்தலின் பின் தாம் மீண்டும் மொட்டுக் கட்சிக்குத் திரும்பவுள்ளதாகவும், அது தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் வாக்காளர்களை தவறாக வழிநடத்த முற்பட்டுள்ளனர்.
ஆனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் எந்வொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுடன் கூட்டணி சேரும் திட்டம் மொட்டுக்கட்சியிடம் இல்லை.
அவ்வாறான கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவது பொய்யான தகவலாகும் என்றும் சாகர காரியவசம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.