IMF தொடர்பில் ரணில் பரபரப்புத் தகவல் - இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம், அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தாலும், அந்த திட்டத்தை செயல்படுத்தத் தவறியமை சிக்கலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐந்தாவது தவணையான 344 மில்லியன் டொலர் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கட்டண மறுசீரமைப்பு
எனினும் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அந்தத் தொகையை வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும்.
மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், 344 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புதல் பெறுவதற்கு நேரம் எடுக்கும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இந்தப் பிரச்சினைகள் காரணமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீடும் ஆபத்தில் உள்ளது என அவர் கூறினார்.
தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, சமீபத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தும் போது, ஜூன் மாதத்திற்குள் மின்சார கட்டண விடயங்களில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், பொருத்தமான முறையில் முன்னேறுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.