ஜனாதிபதி தொடர்பில் மொட்டு கட்சி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்தால் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முறையற்றதொரு கருத்தாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது,''தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பொய் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மாத்திரம் மக்கள் மத்தியில் பிரதான அரசியல் கொள்கையாக மக்கள் மத்தியில் முன்வைத்தது. அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தெரிவு செய்தால் மாத்திரமே உள்ளுராட்சி மன்ற அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும். அரச தலைவர் என்ற வகையில் பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரம்
யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் கைப்பற்றுவோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்துக்கு சேவையாற்றியுள்ளது.
ஆகவே 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றதை போன்று இந்த முறையும் வெற்றிப் பெறுவோம்.
எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள்.'' என தெரிவித்துள்ளார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
