ராஜித அரசாங்கத்தில் இணைவதை எதிர்க்கும் மொட்டுக்கட்சி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்னவை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளும் முடிவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே தான் பல்வேறு காரணங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியை சந்தித்ததாகவும் எனினும் அதனை கட்சி தாவலாக அர்த்தப்படுத்துவது பொருத்தமற்றது என ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.
ஜனாதிபதிக்கு தகவல்களை அனுப்பிய மொட்டுக்கட்சியினர்
எவ்வாறாயினும் ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்து சுகாதார அமைச்சு பதவியை பெற போவதாக பரவிய தகவல் தொடர்பில் பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற வகையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு தகவல்களை அனுப்பியிருந்தனர்.
“ராஜித போன்றோரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. அவருககு எதிராக வழக்குகளும் இருக்கின்றன.எந்த வகையிலும் அவருக்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்க முயற்சிக்க வேண்டாம். அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்” என பல தகவல்களை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எதிர்வரும் நாட்களில் என்ன செய்ய போகிறார் ராஜித
எது எப்படி இருந்த போதிலும் ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணையும் அரசியல் திட்டத்தை அவரது புதல்வரான சத்துர சேனாரத்னவே மேற்கொண்டிருந்தாக பேசப்படுகிறது.
ராஜித சேனாரத்ன வரவு செலவுத்திட்ட விவாதத்திற்கு மத்தியில் அரசாங்கத்தில் இணைவார் என கூறப்பட்டது. எனினும் அப்படியான கட்சி தாவல் நடக்கவில்லை.
இதனால், ராஜித சேனாரத்ன எதிர்வரும் நாட்களில் என்ன செய்ய போகிறார் என்ற தகவல்கள் இதுவரை கசியவில்லை.