தையிட்டி போராட்டக்காரர்களிடம் போலியான ஆவணங்களா! உண்மை என்ன..
யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக மொட்டுதரப்பு முன்வைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும் எனவும் மொட்டுதரப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
நாாளுமன்றில் நேற்று கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட குறித்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அடையாளப்படுத்தியுள்ள நிலை
“குருந்தூர் மலையில் நில அளவையியல் திணைக்களம் சட்ட ரீதியில் காணி எல்லைகளை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள்.
வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பெளத்த விகாரை மற்றும் தொல்பொருள் சின்னங்களை பிரச்சினைக்குரியதாக்கி அதனூடாக அரசியல் செய்கிறார்கள்.
வடக்கு மாகாணத்தில் 600 இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்து, தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் தொடர்பில் சமூக கட்டமைப்பில் வெறுப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் அரசியல் செய்கிறோம்.
மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் தொடர்பில் சமூக கட்டமைப்பில் வெறுப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் அரசியல் செய்கிறோம்.
மத தலங்கள் மற்றும் பிரிவெனா உட்பட மத பாடசாலைகள் அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் கருத்து
மத நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான திட்டங்களை குறிப்பிடவில்லை.
யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இதுவரையில் உறுதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விகாரை 1956 ஆம் ஆண்டு நகர திட்ட வரைபடத்தில் திஸ்ஸ விகாரை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த விகாரையை அண்மித்த பகுதியில் உள்ளவர்கள் உரிமை கோருவதற்காக போலியான ஆவணங்களை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும். இந்த விகாரையை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் குடியிறுப்பவர்களை அகற்ற வேண்டும்.
ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும்” என்றார்.
பௌத்தமயமாக்கல்
எனினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த தமிழ் மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல என கூறப்படுகிறது.
அதனால் குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
ஆனாலும் அது இதுவரை நிறைவேறாத நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல முரணான கருத்துக்கள் கூறப்பட்டு திசை திருப்பும் முயற்சியொன்று உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் காட்டப்பட்ட வருகின்றமை குறிப்படத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |