கனடாவில் பதவி விலகியுள்ள ஒட்டாவா காவல்துறை அதிபர்
கனேடிய ஒட்டாவாவின் காவல்துறை அதிபர் பீட்டர் ஸ்லோலி தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் அவர் ஒட்டாவா காவல்துறை சபைக் கூட்டத்திற்குப் பின்னர் தனது பதவி விலகலை பகிரங்கமாக அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவின் நகர மையத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்திய ‘டிரக் கொன்வே’ போராட்டத்தை அவர் கையாண்ட முறை குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்ததில் இருந்து நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், எதிர்பாராத இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக அவர், தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒட்டாவா காவல்துறை இன்னமும் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்லோலி, நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர உறுதியான செயற்பாட்டுத் திட்டத்தை முன்வைக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நெருக்கடியின் போது நகரின் சட்ட அமுலாக்க முயற்சிகளுக்கு உதவுவதற்காக பணிபுரியும் அதிகாரிகள் சிலருடன் அவர் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஸ்லோலியுடன் பணிபுரிந்த குறைந்தது மூன்று அதிகாரிகள், குறித்த
போராட்டக்காலத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.