மீண்டும் அரசியல் சிக்கலுக்குள் கோட்டாபய! சுரேன் ராகவனும் சாந்த பண்டாரவும் இலக்குகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.
இன்று மாலை நடைபெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் கொள்கை இணக்கம் நேற்று வெளியிடப்பட்டது.
ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்திருந்தார்
பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவி விலகலின் பின்னர் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த சர்வகட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு, பதவிக்காலம் மற்றும் இலாகாக்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை அடுத்து இணக்கம் காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். .
இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில், ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்கவேண்டுமானால், சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோர் தமது ராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.



