சுடுகாடாகும் மன்னார்.. ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் அர்ச்சுனா எம்பியின் எச்சரிக்கை
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தினால் மன்னார் மண் சுடுகாடாக மாறும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.09.2025) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், "மன்னார் காற்றாலை விவகாரம் தற்போது வடக்கு மாகாணத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. வடக்கை பொறுத்தவரை மன்னார் மிக கேந்திர முக்கியமான இடம்.
ஜனாதிபதியின் அறிவிப்பு
மன்னாரில் ஏற்கனவே 35 காற்றாலைகள் இருக்கின்றன. அதற்கு பின்னர், மேலதிகமாக 15 காற்றாலைகள் கொண்டு வரப்பட்ட போது ஜனாதிபதி கூட்டம் ஒன்றினை வைத்து தீர்மானிக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட வந்த அமைச்சர்களை கூட எமது மக்கள் அடித்து விரட்டினார்கள். ஆனால் அப்படி இருந்தும் மன்னாரில் காற்றாலையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை நேற்றைய தினம் எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் மன்னார் மக்கள் தற்போது எங்கு போவது, மின்சாரம் என்பது ஒரு அடிப்படை வசதி. 45 காற்றாலைகளை கொண்டு வரும் போது எந்த வகையில் அடிப்படை அபிவிருத்தி ஏற்படும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



