அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பொறுப்பேற்க முடியாது! நழுவும் பங்காளிக்கட்சி!
அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான பொறுப்பை தமது கட்சியினால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ளது.
எனினும் அரசாங்கம் அதனை செயற்படுத்தாதபோது, அரசாங்கத்தின் வீழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றின்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக்கு வரும் உணவு மற்றும் எரிபொருள் கப்பல்கள், திரும்பிச் செல்வதில்லை.
இலங்கையிலேயே நங்கூரமிட்ட நிலையில் தாமதக்கட்டணங்களையும் செலுத்தி பொருட்கள் இறக்கப்படுகின்றன.
இதனால் அரசாங்கத்துக்கு பொருட்களை இறக்குமதி செய்வதைக்காட்டிலும் மேலதிக செலவுகள் ஏற்படுகின்றன.
இதற்கு அரசாங்கத்தின் உரிய முகாமைத்துவமின்மையே காரணம் என்று அமரவீர குறிப்பிட்டுள்ளார்.