இரண்டு மதுபான போத்தல்களால் இடமாற்றம் செய்யப்பட்ட 100 சிறப்பு அதிரடிப்படையினர்
இரண்டு மதுபான போத்தல்களை சிறைச்சாலை வளாகத்திற்குள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பில் கடமையாற்றிய 100 விசேட அதிரடிப்படையினர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2022, மார்ச் 11ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மதுபானம் கடத்த முற்பட்டபோது சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் பிடிபட்டார்.
இதனையடுத்து சிறைக்குள் மது போத்தல்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காததன் காரணமாக சிறை அதிகாரிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.
இந்தநிலையில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகிய இருதரப்பினராலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த இடமாற்றங்களுக்கு மேலதிகமாக, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



