வந்த பாதையும் போகும் பாதையும்
சுதந்திர இலங்கையில் ஈழத் தமிழர் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியாமையினால் 1940களின் இறுதியில் தமிழ்த் தேசிய இனம் போராட வேண்டிய சூழல் உருவாகியது.
1950க்கு முன்னர் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்ற நிலை மாறி ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி கோரி போராட்டங்கள் துளிர் விடத் தொடங்கியது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற அரசியல் பாதையான ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தமிழர் உரிமைகள் பெற முடியாது என்பதை உணர்ந்த தந்தை செல்வா தமிழரசு கட்சியை உருவாக்கினார்.
அவரால் குறைந்தபட்சம் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழர்களின் போராட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவாதங்கள், நீதிமன்ற வழக்காடல்கள் என்பவற்றிற்கூடாக தமிழர் உரிமைகளை பெற முடியாது என்பதை சுட்டிக்காட்டி நேரடி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 1949 ஆம் ஆண்டு களத்தில் இறங்கி போராடினால் தான் தமிழர்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்ற கோசத்துடன் தமிழரசுக் கட்சி களத்துக்கு வந்தது.
தந்தை செல்வாவின் தலைமையில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கியது.
ஆனாலும் இங்கு அரசாங்கத்துக்கு எதிராக எதிரான போராட்டங்களிலும் பார்க்க அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு எதிரான உள்ளூர் ஊர்வலங்கள், கூட்டங்கள், விவாதங்கள், அணி அணியாகச் சென்ற பிரச்சாரங்கள் என்பனவே பெருமளவில் அரங்கேறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய உள்ளூர் போராட்ட நடவடிக்கைகளை கையாண்ட தமிழரசுக்கட்சி 1952ம் ஆண்டு எதிர்கொண்ட முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் கு.வன்னியசிங்கம் அவர்களும் கிழக்கில் ராசமாணிக்கம் அவர்களும் வெற்றி பெற்று தமிழரசுக் கட்சி இரண்டு ஆசனங்களை மட்டுமே வென்றது.
ஆனால் 1956ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெரும்பாலான ஆசனங்களை வடகிழக்கில் பெற்றதன் மூலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் நிலையை எட்டியது.
அதனால் அது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போராட தொடங்கியது. 1956ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தனிச் சிங்கள மொழிச்சட்ட மசோதாவுக்கு எதிராக காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சி இலங்கை அரசுக்கு எதிரான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆனால் அந்தப் போராட்டம் சில மணி நேரங்களுக்குள் அரசாங்கத்தின் ஆதரவுடன் பொலிஸ் மற்றும் சிங்களக் காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினால் அடித்து உதைத்து தமிழ் தலைவர்கள் ரத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு காலிமுகத் திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
இதன்மூலம் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட முதலாவது சத்தியாக்கிரகப் போராட்டம் இலங்கை அரசாங்கத்தால் குழப்பியடிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதுதான் இதுதான் தமிழ் தலைவர்கள் செய்த ஒரே ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் ஆகும்.
அதன் பின்னர் தமிழரசுக் கட்சி தமிழர் தமிழ் மக்களுடைய ஏகோபித்த ஆதரவைப் பெற்று அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆங்காங்கே நடத்தியது என்பது உண்மைதான் ஆனாலும் தமிழ் மிதவாதத் தலைவர்கள் காலிமுகத்திடல் போராட்டத்துக்கு பின்னர் எந்த ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
1956ம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட காலத்தில் தான் அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்ற திட்டத்தில் குடியேறிய சிங்கள குடியேற்றவாசிகளினால் ஏற்கனவே அங்கு பூர்வீகமாக வாழ்ந்த 156 தமிழர்கள் வெட்டி இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
இந்தப் பின்னணியில்தான் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்களுடைய பெரும் ஆதரவு திரண்டது. இதனால் இவர்கள் திருமலை யாத்திரை என ஆரம்பித்து ஊர்வலங்கள், மகாநாடுகள் கூட்டங்கள், என தமிழர் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் தொடங்கின.
இதன் அடுத்த கட்டமாக தமிழரசுக்கட்சி 1962ஆம் ஆண்டு சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது. யாழ் கச்சேரிக்கு முன்பாக 58 நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழிமறிப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர் அதனை நிர்வாகம் முடக்க போராட்டம் என்றுதான் அந்தப் போராட்டத்தை குறிப்பிடவேண்டும்.
ஐம்பத்தி ஒன்று ஆம் ஆண்டு 1956ம் ஆண்டு காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் போராட்டமும் 1962ம் ஆண்டு நிர்வாக முழக்கப் போராட்டம் என்ற இரண்டு போராட்டங்களை தவிர பின்னாட்களில் சாத்வீக வழியிலான எந்த ஒரு பெரிய அளவிலான போராட்டத்தையும் தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தமிழர்கள் ஜனநாயக வழியில் சாத்வீகப் போராட்டங்களை மேற்கொள்கின்ற பொழுது சிங்களத் தலைவர்கள் மெல்ல கீழே இறங்கி வந்து ஒப்பந்தங்களை செய்வதும், வாக்குறுதிகளை வழங்குதும் பின் அவற்றை காற்றில் பறக்க விடுவதுமான ஒரு அரசியல் வரலாறு தமிழ் அரசியல் பரப்பில் நீண்டு செல்கிறது.
அந்த வரிசையில் சிங்களத் தலைவர்களுடன் தமிழர்கள் செய்துகொள்ளப்பட்ட “மகேந்திரா ஒப்பந்தம்“, “பண்டா-செல்வா ஒப்பந்தம்“, “டட்லி-செல்வா ஒப்பந்தம்“ என்பன சிங்களத் தலைவர்களால் ஒருதலைப் பட்சமாக கிழித்தெறியப்பட்டது.
இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் பூர்த்தி செய்ய முடியாது என்பது உணரப்பட்டது.
இதன் விளைவுதான் தமிழர் தனியே பிரிந்து சென்று தனி நாட்டை உருவாக்குவதற்கான அரசியல் பாதைக்கு செல்ல வரலாறு நிர்பந்தித்தது.
இந்தப் பின்னணியில் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்சும், தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கூட்டு முன்னணி உருவாக்கப்பட்டது.
இந்த முன்னணி தனிதமிழீழத்தை அடைவதற்கான வழியாக, முதற் படியாக 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.
அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனமாகக தமிழர் விடுதலைக் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் 98 வீதமான வாக்குகளைப் பெற்றது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் படி மக்கள் ஆணையைப் பெற்ற கூட்டணியினர் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் வெற்றி பெற்றதும் “தமிழீழ நிழல் அரசாங்கத்தை“உருவாக்குவது என்றுதான் கூறினார்கள். அதாவது தமிழீழக் மகாசபையை கூட்டுவது என அறிவித்திருந்தனர்.
அதன் பிரகாரம் அவர்கள் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் ஒன்று திரண்டு தமிழீழக் கவுன்சிலை கூட்டி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் கொழும்பு சிங்கள நாடாளுமன்றத்தில் கூடி சிங்கள அரசுக்கு விசுவாசப் பிரமாணத்தை செய்துகொண்டனர்.
இதன்மூலம் எதிர்க்கட்சி ஆசனத்தையும் பெற்றுவிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் காற்றில் பறக்கவிடப்பட்டது.
இத்தகைய நடவடிக்கை இளைஞர்கள் தமது கையில் ஆயுதத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஒரு பகுதியுமாகும்.
அதாவது தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு உரிமைகள் பெறமுடியாத பட்சத்தில் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடுவார்கள் என வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் இன்னுமோர் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தெரிவுக்கு தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போரட்டத்திற்கு செல்வது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று போக்கு உருப்பெற்று விட்டது. இந்த நிர்ப்பந்தம் தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் மீதும் அரசு ஒத்தோடிகள் மீதும் பெரும் வெறுப்பை உருவாக்கியது.
இதுதான் “துரோகிகள் ஒழிப்பு“என்ற முதற்கட்ட ஆயுத பயன்பாட்டுக்கு விட்டது. அதுவே அல்பிரட் துரையப்பா தொடக்கம் துரோகிகள் ஒழிப்பு வரலாற்றை துவக்கி வைத்தது.
அதன் அடுத்த கட்டமாக இலங்கை ஆயுதப் படைக்கு எதிரான போராட்டங்கள் படிப்படியாக முளைவிட்டு வளரத் தொடங்கியது. இவ்வாறு தொடங்கிய தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான ஆயுதப்போராட்டம் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளையும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் களத்திலேயே பறிகொடுத்து தமிழ்மக்களுடைய கொள்ளளவுக்கு விஞ்சிய உயிர்த் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் இந்தப் போராட்டத்துக்கு வழங்கியிருக்கிறது.
30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தில் தமிழக மக்கள் பெற்ற துன்பங்கள் என்பது எந்த மனித மொழிகளிலும் சொல்லிட முடியாதவைகள். இத்தகைய மிகப்பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த மக்கள் எல்லாக்காலங்களிலும் தமிழ் தலைமைகளின் பின்னே சென்று எத்தகைய அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராகவே இருந்தனர் ஆக தமிழ் மக்கள் எப்போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குணத்துடன் போராடுவதற்கு தயாராகவே இருந்துள்ளனர்,இருக்கின்றனர்.
2009ஆம் ஆண்டு இனப்படுகொலை இராணுவ நடவடிக்கை மூலம் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு பேரழிவின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக மீண்டும் களத்துக்கு வந்த மிதவாத அரசியல் தலைமைகள் தமிழர் அரசியல் வரலாற்றில் எங்கு போராட்டம் தொடங்கியதோ அங்கேயே திரும்பிவந்து நிற்கின்றனர்.
சுயநல அரசியலுக்காக, அற்பத்தனமான சுகபோகங்களுக்காக ஒரு இனத்தின் நலனையும் தேசிய அபிலாசைகளையும் விட்டு பிறக்கின்ற பயிறு வளர்க்கின்ற ஒரு கூட்டம் இப்போது களத்தில் தலைவிரித்தாடுகிறது. இன்று இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயினும் சரி ஏனைய அரசியல் தலைமைகள் ஆயினும் சரி இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரிலேயே தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட அரசியல் தலைவர்களேயாவர்.
ஆனாலும் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு, தமிழ்தேசிய நலன்களையும் கைவிட்டு, தமிழ் மக்களின் நலனைப் சிறிதளவும் கருத்தில் கொள்ளாது சிங்கள அரசின் ஒத்தோடிகளாக இருப்பதையே இன்று காண முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற அரசியல் அமைப்பிலிருந்து முதலாவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வெளியேறியது.
அதைத்தொடர்ந்து தமிழரசுக் கட்சியிலிருந்து விக்னேஸ்வரன் தலைமையிலான இன்னுமொரு அணியினர் உடைந்து மூன்றாவது அணியாக உருப்பெற்றது.
அதேபோன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உருவாக்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து மணிவண்ணன் தலைமையில் உடைந்து இன்னொரு அணி உருவாகியது.
இத்தகைய குழப்பகரமான சூழலில் மத்தியில் இன்று மூன்று பிரதான அரசியல் கட்சிகள் தமிழர் மத்தியில் தமிழ் தேசிய அரசியலை பேசிக்கொண்டு சுயநல அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழரசுக்கட்சி "சமஷ்டி"கோரிக்கையை முன்வைத்து தாங்கள் அரசியல் செய்வதாக சொல்லிக்கொள்கிறார்கள்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனப்படுகின்ற விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் சமஷ்டியை விட சற்று அதிகமான அதிகாரங்களைக் கொண்ட "கூட்டாட்சி" (confedration) சென்ற தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறார்கள்.
இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளும் சரியோ தவறோ கூடியது குறைந்தது என்பதற்கு அப்பாற்பட்டு ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு தென்படுகிறது.
ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1963இல் பேராசிரியரின் ஐயா அவர்கள் முன்வைத்த "ஒரு நாடு இரு தேசம்"என்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டை இப்போது முன்வைக்கிறார்கள் இந்த "ஒரு நாடு இரு தேசம்" என்ற அரசியல் நிலைப்பாட்டுக்கான தத்துவார்த்த விளக்கம் இன்னும் யாருக்கும் புரியவில்லை.
ஒரு நாடு என்கின்ற போது அது ஒற்றையாட்சியை முன்னிறுத்துகிறது அதனை ஏற்றுக் கொள்கிறது. எனவே ஒற்றை ஆட்சியையே கஜேந்திரகுமார் வலியுறுத்துகிறார் போல தெரிகிறது எனவே அவர் தமது தாய் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த ஒற்றையாட்சி நிலைப்பாடு இன்னும் மாற்றம் அடையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதாவது பரம்பரை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருத வேண்டும். இவ்வாறு தான் இன்று தமிழ் அரசியல் பரப்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் செல்நெறி என்பது திக்கற்று, குறிக்கோளற்று தமிழர் தேசிய நலனுக்கு எதிரான திசையில் பயணிக்கிறார்கள்.
இங்கே குறிப்பிடப்படும் மூன்று பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதைக் காணமுடிகிறது இந்தப் பின்னணியில் கடந்த 12 ஆண்டு காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் என்ற நிலையிலிருந்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஜனநாயக வழிதழுவிய ஜனநாயக போராட்டங்கள் எதனையும் இந்தக் கட்சிகள் மேற்கொள்ளவில்லை.
கட்சிகளும் சிவில் சமூகமும் இணைந்து இரண்டு தடவை நடத்திய "எழுக தமிழ்" மற்றும் "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை"என்ற இரண்டு பெயரிடப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடந்ததேயன்றி அரசியல் கட்சிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமது அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்கு அமைய தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்று கோரி வீதியில் இறங்கி பெரிய அளவிலான மக்கள் போராட்டத்தை இந்த அரசியல் கட்சிகள் நடத்தவில்லை மாறாக தமிழ் மக்களுக்கு என்ன வேண்டாம் என்று கூறி கோரி ஒரு சிறிய அளவிலான போராட்டத்தை அண்மையில் நல்லூரில் நடந்து முடிந்து.
தமிழீழ கோரிக்கையை கைவிட்டார்கள் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்றார்கள் அந்த தீர்வு எமக்கு வேண்டும் என்று இவர்கள் யாரும் போராடவில்லை.
தமது அரசியல் கட்சிகளுக்கிடையிரான போட்டிகளையும் பொறாமைககளையும் ஊடகங்களில் வெளியிடுவதையும் போட்டி போட்டு ஊடக அறிக்கைகளை எழுதுவதிலும், மகஜர்கள் கையெழுத்து வேட்டை என போலியான செயற்பாடுகளில் ஈடுபட்டு போராட்ட குணமுள்ள தமிழ் மக்களை சலிப்படைய வைப்பதோடு தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அத்தோடு நாடாளுமன்றத்தில் வாய் கிழிய கழுதை கத்துக் கத்தி கைதட்டலை வாங்குகின்ற காலாவதியான ஒரு அரசியல் போக்கையே இந்த தமிழ் அரசியல் கட்சிகள் இப்போதும் கடைப்பிடிப்பதை காண முடிகிறது.
இப்போது இந்த தமிழ் அரசியல் தலைமைகளினால் தமிழ் மக்கள் ஓட்டிச் செல்லப்படும் பாதையானது இருள் சூழ்ந்ததாக, நம்பிக்கை அற்றதாக, பொய்கள் நிறைந்ததாக, நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் நோக்கம் கொண்டதாக, சுயநல பணப்பைகளை நிரப்புவதாக, தமிழ் தேசியத்தை சிதைப்பதாக, உள்நாட்டு கொள்கை அற்றதாக, வெளியுறவுக் கொள்கை பற்றிய பார்வை அற்றதாக, பகைவர்களை சம்பாதிப்பதாக போகும்பாதை மிக மிக ஆபத்தான படுகுழி நோக்கி செல்வதாக அமைந்திருப்பதையே வரலாறு மிகவும் துயரத்துடன் பதிவு செய்கிறது.
கட்டுரை : தி.திபாகரன். M.A.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
