இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்த இலங்கை
உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து களமிறங்கிய இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 157 என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அதில் குசல் பெரேரா 4 ஓட்டங்களிலும், கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இலங்கை அணியின் சிறப்பான துடுப்பாட்டம்
இதன்பின் நிசாங்கா - சமரவிக்ரமா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுதியிருந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.
கடைசி வரை களத்தில் இருந்த தொடக்க வீரர் நிசாங்க 83 பந்துகளில் 77 ஓட்டங்களையும், சமரவிக்ரம 54 பந்துகளில் 65 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
இதன் மூலமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. இதேவேளை தொடர்ச்சியாக 5 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் இங்கிலாந்து அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்ததே இல்லை என்ற வரலாறும் இதன் மூலம் தக்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.