பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை: வரலாற்றில் புதிய சாதனை
ஆசிய கோப்பைத் தொடரின் (2023) இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி களமிறங்கிய நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடர்ச்சியாக 11 ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 10 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. தற்போது முதல்முறையாக 11 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது.
சிறப்பாக பந்துவீசிய பத்திரன
நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆனால் மதீஷ பத்திரன மற்றும் தீக்சனவின் அபார பந்துவீச்சால் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.சிறப்பாக பந்துவீசிய பத்திரன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இதனையடுத்து இலங்கை அணி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தததால், ஆட்டம் லோ- ஸ்கோரிங் த்ரில்லராக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிறப்பாக விளையாடிய சமரவிக்ரம 69 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 54 ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து தடுமாறியது.
ஆனால் இன்னொரு பக்கம் விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக ஆடிய அசலங்கா, யாரின் பந்துவீச்சிலும் அவசரப்படவில்லை. இறுதியாக 39 ஓவர்களில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி வென்றுள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 92 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |