இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு (Photos)
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் நாளைய தினம்(24) பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதுடன் யாழ். சாலை முடங்குவதால் அதனுடன் இணைந்த சாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்படுமென தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ். சாலை ஊழியர்கள் கூட்டாக இதனை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டோவில் டிப்போவில் டீசல் எரிபொருள் கிரமமாக வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், நேற்று(22) இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி இ போ ச. ஊழியர்கள் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கலை நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர்
யாழ். மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கங்காதரன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டிற்காக தனியார் சேவையினருக்கு எரிபொருள் வழங்க முடியாது எனக்கு கூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டிற்காக தனியார் பேருந்தினர் பாதிக்கப்படக்கூடாது எரிபொருள் வழங்கப்படாமைக்கு உரிய காரணம் மற்றும் தங்கு தடை இன்றி எரிபொருளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
யாழ். சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
இன்று மாலை வரை தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்து வண்டிகளை கோண்டாவில் சாலையில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன், நாளை அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாவும் தமக்கு தொடர்ச்சியாக இலங்கையை போக்குவரத்து சபையின் கோண்டாவின் சாலையில் எரிபொருள் பெறுவதில் கடும் சிரமங்கள் எதிர்நோக்குவதாகவும் பிறிதொரு இடத்தில் எரிபொருளை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நாளை அரசாங்க அதிபருடன் இடம்பெறும் சந்திப்பின் பின்னரே தனியார்
பேருந்து சேவை பணிபுறக்கணிப்பா அல்லது சேவையை தொடர்ந்து ஈடுபடுதா என
தீர்மானிக்கப்படும் என யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்
தலைவர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.