அரகலயை எண்ணி அஞ்சும் ஆட்சியாளர்கள்: கோவிந்தன் கருணாகரன் காட்டம்
இந்த நாட்டில் மீண்டும் அரகல என்ற ஒன்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஆட்சியாளர்களின் அச்சமே நிகழ்நிலைச் சட்டமூலத்தின் பின்னணி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (24.01.2024) இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“உன் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை ஆனால் உன் கருத்தைச் சொல்லும் உரிமையை எவராவது தடுத்தால் அதற்காக முதல் எதிர்க்குரல் எழுப்புபவன் நானாகவே இருப்பேன் என்று கருத்துச் சுதந்திரத்திற்காக தனது கம்பீரக் குரல் எழுப்பிய அரசியல் வித்தகர் வால்ட்ரேயரின் மேற்கோளுடன் எனது உரையை நிகழ்த்துகின்றேன்.
அரசியலமைப்பை மீறும் செயற்பாடுகள்
ஆட்சித் தலைமையில் இருந்து அமைச்சர்கள் வரை யாரும் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயார் இல்லை. தமது ஊழல், நிருவாகச் சீர்கேடுகளைப் புள்ளி விபரங்களுடன் முன்வைக்கும் போது ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் பயப்பிரதிபலிப்பே இந்த நிகழ்நிலைச் சட்டம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தை அடக்குவதற்காக இந்தச் சட்டமா? அல்லது தொடர்ச்சியாக நல்ல வழியிலே அந்த ஊடகங்களை நல்வழிப்படுத்தவதற்காக இந்தச் சட்டமா? என்பதைப் பொறுத்திருந்துத் தான் பார்க்க வேண்டும்.
இந்தச் சட்டமூலம் இன்றைய காலகட்டத்திலே எதற்காகக் கொண்டு வரப்படுகின்றது. உண்மையில் இந்தச் சட்டமூலத்தில் சொல்லப்பட்ட நோக்கங்ளை அடைவதற்காகவா என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உண்டு.
நமது அரசியலமைப்பு நமக்கு வேண்டிய உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பை பேணிப் பாதுகாக்க வேண்டிய நமது ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதில் ஒரு செயற்பாடாகவே இந்த சட்டமூலத்தை நான் நோக்குகின்றேன். இந்த நாட்டில் மீண்டும் அரகல என்ற ஒன்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஆட்சியாளர்களின் அச்சமே இந்தச் சட்டமூலத்தின் பின்னணி என்பது எனது கருத்து.
மேலும், மக்களின் சிந்தனை வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கல்லறையில் வைப்பதே இந்தச் சட்டமூலமாகும்.
இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த அரசுகள் ஊடக அடக்குமுறையைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வருகின்றார்கள்.
ஊடகங்கள் தங்களுக்குச் சாதமான செய்திகளை வெளிப்படுத்தவில்லையென்றால் அவர்களை அடக்குவதும், அவர்களது கலையகங்களை அடித்து நொருக்குவதும் கடந்த காலங்களில் இந்த நாட்டிலே ஏற்பட்ட சம்பவங்கள்.
சமூக சீர்க்கேடுகள்
முகநூல் பதிவுகள் மூலம் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க அமைச்சர்களினால் ஏற்படுத்தப்படும் ஊழல்களுக்கு எதிராகவோ யாரேனும் ஏதேனும் கருத்துக்களை பதிவிட்டால் அவர்கள் அச்சறுத்தப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.
இந்த நாட்டில் உண்மையை எழுதிய 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அரசின் அச்சுறுத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களாகவே இருக்கின்றார்கள்.
அரசினாலும், அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்து வந்த ஊடகவியலாளர்கள் பலர் அரச தரப்பு படைகளாலும், வெள்ளை வேன்களினாலும் கடத்தப்பட்டு கொலை செய்த வரலாறுகளே இங்கு இருக்கின்றது.
இன்று, தனிமனித தாக்குதலும், தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தவதும் மற்றும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டிப்பார்ப்பதுவுமே கருத்துச் சுதந்திரமாகக் கருதப்படுகிறது.
அதிலும் தற்போது சமூக வளைத்தளங்கள் பல்கிப் பெருகியுள்ளமை உண்மைகளைத் திரிவுபடுத்த ஊக்கமளிக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
போலிப் பெயர்களில் போலி முகங்களில் உண்மைக்குச் சவாலாக இருப்பவர்களைத் தண்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.
ஊடகவியலாளர்கள் என்று முகங்காட்டி ஊடக தர்மத்தைச் சிதைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமும் அரசுக்கு உண்டு. சமூக வளைதளங்கள் மூலம் பல சீர்கேடுகளும் நமது சமூகத்திலே நடைபெறுகின்றது.
நிகழ்நிலைச் சட்டமூலத்தின் ஆபத்துகள்
குறிப்பாக சில சமூக வளைதளங்கள் சில குடும்பங்களை பிரிப்பதோடு தற்கொலைகளை தூண்டுவதாகவும் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து அரசு தன்னையும் தனது அமைச்சர்களையும் பாதுகாக்கவும் பொதுவான மக்கள் எழுச்சியை அடக்குவதாகவும் இந்தச் சட்டமூலம் பயன்படக்கூடாது.
இதற்கேற்றவகையில், இந்தச் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், தற்காலிக ஏற்பாடாக வந்து எமது சட்டத்தில் நிரந்தரமாகிவிட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போலவே இந்தச் சட்டமும் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றிவிடும் என்ற அபாயம் காணப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் வந்த போது இது தமிழர்களுக்கானது என்று நினைத்திருந்த எதிர்க்கட்சியினர் இடது சாரிக் கட்சியினர் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறக்காரர்கள் யாவருக்கும் ஒன்றை நியாபகப்படுத்துகின்றேன்.
தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட போது பார்த்துக் கொண்டிருந்த நீங்கள் அந்தச் சட்டம் உங்களை அண்மித்த போதே விழித்தீர்கள்.
ஆனால், இந்தச் சட்டம் தமிழர்களை விட உங்களை நோக்கியே அதிகமாகப் பாயும். எனவே, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, இன, மத, நிற வேறுபாடின்றி இந்த நிகழ்நிலைச் சட்ட மூலத்தின் ஆபத்துகளைக் களைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |