மொட்டு கட்சியில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை: பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
நிலையான அரசாங்கம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதேநேரம் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார்.
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் எவராலும் நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாது. அது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அராஜகத்தை போன்று நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடாத்தப்படும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்காக உழைக்க வேண்டும், அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும்.
அதேநேரம் வேறு எவரேனும் வெற்றி பெற்றால் அவர் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும், இதன்போதே நாடு அராஜக நிலைக்கு செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |