கோட்டாபய காலத்தில் நியமிக்கப்பட்ட இலங்கை தூதுவர்கள் குறித்து அலி சப்ரி வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பல்வேறு தலைநகரங்களுக்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட சில இலங்கை தூதுவர்கள் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் மாற்றப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள வெற்றிடங்களை பெரும்பாலும் தொழில் இராஜதந்திரிகளைக் கொண்டு நிரப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைக்கு ராஜதந்திர சேவையில் 16 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 12 பதவிகளுக்கு வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரிகளைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன.
மாற்றப்படும் இராஜதந்திரிகள்
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக அப்போது நியமிக்கப்பட்ட சி.ஏ.சந்திரபிரேமவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
அவருக்குப் பதிலாக நேபாளத்தில் பணியாற்றிய தொழில் இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக்க ஜெனீவாவுக்கு அனுப்பப்படவுள்ளார்.
பீய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹோனவின் அனுபவம் இந்த நேரத்தில் முக்கியமானது என்பதால் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.
மேலும், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் சிறப்பாக பணியாற்றி வருவதால் அவர் மாற்றப்பட மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
