இலங்கைக்கு 18ஆவது சர்வதேச நாணய நிதிய திட்டம் தேவையில்லை! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை மீண்டும் 18ஆவது சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை அதற்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர் கென்னத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசின் வரி வருமானம் 2026 ஜனவரி–செப்டம்பர் காலப்பகுதியில் 4.7 டிரில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.5% ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இதில் 3.5 பில்லியன் டொலர் பரிமாற்ற ஒப்பந்தங்களும் (Swaps), 2.2 பில்லியன் டொலர் கடன்களும் அடங்குகின்றன.
வர்த்தகப் பற்றாக்குறை
2026 ஜனவரி–செப்டம்பர் காலத்தில் ஏற்றுமதி 10.7 பில்லியன் டொலராகவும், இறக்குமதி 18.6 பில்லியன் டொலராகவும் இருந்தது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டிக் கடன், தொழில்நுட்ப வசதிகள், மானியங்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்தி உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில்துறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதிய திட்டம்
அரசாங்கத்தின் செலவுகள் வெறுமனே நிதி நிர்வாகத்திற்காக அல்லாமல், நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இலங்கை ஏற்கனவே நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த கட்டமாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் போட்டியிடக்கூடிய தொழில்துறைகளை உருவாக்கி, வெளிநாட்டு வருமானத்தை வலுப்படுத்த வேண்டும்.
எனவே, 18ஆவது IMF திட்டத்தை நாடுவதைவிட, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதே இலங்கையின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வழியாகும் என்பதே கட்டுரையாளரின் பிரதான வாதமாகும்.