ராஜபக்சவின் குப்பை வண்டியில் பயணிக்க தயாராக இல்லை - சஜித் ஆதங்கம்
ராஜபக்சவின் குப்பை வண்டியாக இருக்கும் அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எவரும் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உண்மையான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆதரவளிப்பார்கள் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அதைச் செய்வார்கள் எனவும் கூறினார்.
நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அமைச்சுப் பதவிகள் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச ஆட்சிதான் நாட்டை இப்படி ஒரு அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றது, ராஜபக்சவின் அந்த குப்பை வண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள எவரும் அங்கம் வகிக்க மாட்டார்கள்.
மக்களின் தவறான முடிவே காரணம்
முழு நாடும் பொருளாதார மற்றும் சமூக அரசியல் அவலத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்குக் காரணம், 2019 மற்றும் 2020ல் நடந்த இரண்டு தேர்தல்களில் சரியான முடிவை எடுக்காமல், தவறான முடிவை மக்கள் எடுத்தமை தான்.
திவாலான நாட்டில், சர்வகட்சி என்றழைக்கப்படும் அரசை அமைப்பதுதான் சமீபத்திய மோசடி என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெறுவதே தற்போது செய்ய வேண்டிய உடனடி எனவும் அதற்கு மேல் தீர்வு இல்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொதி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.