ஐந்து பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் உயிரிழப்பு
ஐந்து இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக களுத்துறை, பதுருளிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்ஹேன வீதி, போல்லுன்ன பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடை சாய்ந்து எதிர்த் திசையில் வந்த லொறியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். பதுருளிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே உயிரிழந்தார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு, கொழும்பு - காலி வீதி, தோட்பல சந்திக்கு அருகில், பேருந்தொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பாதசாரி மரணமடைந்தார். அஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே உயிரிழந்தார்.
கொழும்பு, நீர்கொழும்பு வீதி - வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த கொள்கலனென்று மோட்டார் சைக்கிளொன்றின் மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார்.
கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது நபரே உயிரிழந்தார்.
பொலனறுவை, மனம்பிட்டிய வீதியில், டிப்பர் ரக வாகனமொன்று ஓட்டோ ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் ஓட்டோ சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த நபருமே உயிரிழந்தனர்.
குருநாகல், ஜயந்திபுர வீதி, படுமக பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்சாரத் தூணொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் குருநாகல்
வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். குருநாகல் பிரதேசத்தைச்
சேர்ந்த 48 வயது நபரே உயிரிழந்தார்.