சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினம் ஆரம்பம்: கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் (VIDEO)
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமானது இன்று ஆரம்பமாகியது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று 17 நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
இம் முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்துள்ளது.
பலாங்கொடை பொகவந்தலாவ வீதி, குருவிட்ட இரத்தினபுரி வீதி, பெல்மதுளை இரத்தினபுரி ரஜமாவத்தை வழியாகவும் மற்றும் அவிசாவளை, ஹட்டன், நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றுள்ளது.
கோவிட் காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும்.
புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (18) ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்கது.







