முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை - சிவமோகனின் விளக்கம்
முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (06.11.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுத போராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசாங்கங்களே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது.
இனச் சுத்திகரிப்பு அல்ல
தற்போது பலரும் புதுப்புது கதைகளை சொல்லி புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அறிக்கைகளை விடுகின்றனர். சட்டத்தரணி சுவஸ்திகா என்பவர் முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் நான் வன்னியில் இருந்தேன். முஸ்லிம்களை வெளியேற்றிய அந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது என்பதற்கு பாரிய வரலாறு உள்ளது. ஒரு இனத்தில் இருப்பவனை அதே இனத்தை சேர்ந்த ஒருவன் காட்டிக்கொடுத்தால் அவன் துரோகி என்ற அடையாளங்களை சொல்லி அன்றைய காலத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
ஈரானில் அந்த நாட்டு இராணுவத்தை காட்டிக் கொடுத்தவர்கள் ஈரானை பொறுத்தவரை துரோகிகளே. எமது மண்ணிலும் தமிழர்கள் ஈழ விடுதலை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தால் துரோகி என்ற ரீதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

ஆனால், அந்த நேரத்தில் இன்னுமொரு இனம் எமது போராட்டத்தை காட்டிக் கொடுக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மீது மரண தண்டனையோ அல்லது வேறு தண்டனையோ விதிக்க கூடிய நிலைமை தவறு என்ற அடிப்படையில் அன்று முஸ்லிம்கள் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது இனச் சுத்திகரிப்பு அல்ல. எமது ஈழவிடுதலை போராட்டத்தில் ஒரு அங்கமாக நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |