ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரி பொறுப்பு - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரசன்ன ரணதுங்க
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முற்றாக பொறுப்புக் கூற வேண்டும் என்பதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranathunga) தெரிவித்துள்ளார்.
கம்பஹா யக்கலை வீதியவத்தை பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது கோபம் கொண்டவன் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே எமது ஆரம்பம். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அந்த மரியாதையை கொடுப்போம்.
எனினும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழி நடத்திய நபர் குறித்து எமக்கு சிக்கல் இருக்கின்றது. இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என நான் கடந்த பொதுத் தேர்தலின் போது கூறினேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தார். அவர்கள் இப்போது, இந்த அரசாங்கத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி முழுமையாக பொறுப்புக் கூறவேண்டும். அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் கூறி வருகிறேன்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியில் பேசுவதை நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். தொடர்ந்தும் வாய்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. கூறும் விடயங்களுக்கு பதிலளிக்கும் போது, சிலருக்கு வலிக்கின்றது.
நான் எப்போதும் எனது நிலைப்பாட்டை கூறுபவன். அரசாங்கம் என்ற வகையில் முன்நோக்கி செல்ல வேண்டுமாயின் நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்திற்குள் இருக்க முடியாத எவராவது இருப்பார் எனில், உள்ளே இருந்து கொண்டு அனைத்து சிறப்புரிமைகளையும் அனுபவித்தவாறு பொய்யாக கத்திக்கொண்டிருக்கலாம் வெளியில் செல்லலாம்.
அப்படியில்லை என்றால், அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பை பாதுகாத்துக்கொண்டு இருக்க வேண்டும். அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமில்லை.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவுடனேயே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றார். வெளியேற விரும்பும் நபர்கள் வெளியேறினாலும் எம்மால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.




