அடுத்தடுத்து சிக்கலில் ராஜபக்ச குடும்பத்தினர்.. ஷிரந்தி தொடர்பில் புலனாய்வாளர்களிடம் முக்கிய ஆதாரம்
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக சீன அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட இயந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட சிரிலிய அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தரப்பினரை மையமாகக் கொண்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் இவ்வழக்கை மேற்பார்வையிடும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலிப பீரிஸின் வழிகாட்டுதலின் கீழ், சிஐடியின் நிதி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் சிஐடி செல்லும் ஷிரந்தி
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவியாக இருந்த ஷிரந்தி ராஜபக்ச, குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை நன்கொடையாக வழங்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு, தேசிய சேமிப்பு வங்கியிடம் கடிதம் மூலம் நிதி கோரியிருந்தார்.

அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் வழங்கிய வாய்மொழி உத்தரவின் பேரிலும், 10 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளைக்கு விடுவிக்கப்பட்டது.
இருப்பினும், வங்கியிலிருந்து பெறப்பட்ட அந்த 10 மில்லியன் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நிதியைக் கொண்டு குறிப்பிட்ட இயந்திரத்தை வாங்குவதற்குப் பதிலாக, சீன அரசாங்கத்தால் கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த CT ஸ்கேன் இயந்திரமே மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உட்படப் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவி ஷிரந்தி ராஜபக்ச, அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பொறுப்புள்ள அதிகாரிகள் ஆகியோரை நிதி விசாரணைப் பிரிவுக்கு வரவழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.