தமிழ் மக்களுக்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும்: இந்திரகுமார் பிரசன்னா வலியுறுத்து
இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைப்பதற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ம் ஆண்டு வெலிகடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் நினைவு நிகழ்வு நேற்று (27) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனக் குரோதமற்ற வாழ்க்கை
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
”தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ வேண்டும்.
எங்களுடைய தமிழ் போராட்ட தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டது தவறு என இன்று சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காலி முகத்திடல் போராட்ட களத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. நியாயபூர்வமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக எமது தலைவர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்தது 39 வருடங்களின் பின்னர், இன்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
காலிமுகத்திடல் போராட்டத்திலிருந்த போராட்டக்காரர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் இனவாதத்தை கக்கி, தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரித்து ஆண்டதன் காரணமாகவே இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
சிங்கள மக்கள் அநியாயங்கள், அக்கிரமங்கள், இராணுவ அடக்குமுறைகளை என்பவற்றை தற்போது அனுபவித்து வருகிறார்கள். இதன் விளைவாகவே அவர்கள் தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய உண்மையை உணர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்களினால் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்கள் நினைத்தது நடக்கவில்லை.
கைப்பொம்மையாக்கப்பட்ட விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களின் கைப்பொம்மையாகவே இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
விக்ரமசிங்கவினால் இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியும் என மக்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில், விக்ரமசிங்க தெரிவு செய்த அமைச்சரவையில் 14 பேர் ராஜபக்ச சகாக்களே.
மக்கள் யாரையெல்லாம் நிராகரித்துள்ளார்களோ அவர்களுடன் இணைந்தே விக்ரமசிங்க அதிகாரத்திற்கு வந்துள்ளார்.
தமிழ் மக்களின் ஒற்றுமை
இந்த விடயங்கள் ஒரு புறம் இருந்தாலும் தமிழ் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பினை மேலும் பலப்படுத்தி எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும்.
பல உயிர்த்தியாயங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரித்தாள்வதற்கும் சில சக்திகள் முனைகின்றன. எமது தலைவர்களின் தீர்க்கதரிசனத்தில் உருவாக்கப்படட இதனை பிளவுபடுத்தும் எண்ணத்தோடு யாரிருந்தாலும் அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
தங்கதுரை, குட்டிமணி ஆகியோரின் படுகொலையின் பின்னரே பல தமிழ் இயக்கங்கள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் விடுதலை போராட்டங்களுக்கு சென்றார்கள்.
விடுதலை வேட்கையில் கிடைத்த ஒரு துளிதான் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த வடகிழக்கு இணைப்பு. ஆனால் சிங்கள பேரின அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றது.
இந்தியாவின் தலையீடு
இந்தியா உரிய கரிசனை செலுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மேல் சென்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்.
இதற்கான அழுத்தங்களை இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். எனவே தென்னிலங்கை மக்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதென்றால் இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைப்பதற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.